பாம் போடத் தெரியும், பாம்பு பிடிக்கத் தெரியாத அமெரிக்கர்கள்.. வேட்டைக்கு கிளம்பிய தமிழக “வீரர்கள்”

ular sawahபுளோரிடா: அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் மலைப்பாம்புகளின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த அமெரிக்கர்களால் முடியவில்லை. எனவே, தமிழகத்தில் இருந்து இருளர் சமூகத்தைச் சேர்ந்த இருவர் பாம்பு பிடிக்கும் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புளோரிடா மாகாணத்தில் மலைப்பாம்புகளின் பெருக்கம் நாள் தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் அங்கு வாழும் வன உயிரினங்களை பாம்பு கொன்று தின்றுவிடுகின்றன. இதனால் வன விலங்குகளின் இனப்பெருக்கம் குறைந்தும் பாம்புகளின் இனப்பெருக்கம் அதிகரித்தும் வருகிறது.

இதனைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று யோசித்த அரசு, தமிழகத்தில் வாழும் பழங்குடிகளான இருளர்கள் பாம்பு பிடியில் பலே ஆட்கள் என்ற தகவலை அறிந்து தமிழகத்தைச் சேர்ந்த மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் ஆகிய இருவரையும் புளோரிடா மாகாணத்திற்கு வரவழைத்துள்ளது. இவர்களுக்கு மொழி பிரச்சனை ஏற்படாதவாறு 2 மொழிபெயர்ப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புளோரிடா மீன் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு கமிஷனால் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள இவர்கள், தற்போது புளோரிடா பல்கலைக்கழக வன விலங்கு உயிரின ஆய்வாளர் பிராங்க் மஷோட்டி தலைமையிலான குழுவினருக்கு மலைப்பாம்புகளை எப்படி பிடிப்பது என்ற பயிற்சியை அளித்து வருகின்றனர்.

கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் 13 மலைப்பாம்புகளை சடையனும், வடிவேலும் பிடித்துள்ளனர். கீலார்கோவில் உள்ள முதலை ஏரி தேசிய வன விலங்கு சரணாலயத்தில் 4 மலைப்பாம்புகள் பிடிப்பட்டன. அவற்றில் ஒன்று 16 அடி நீள பெண் மலைப்பாம்பு ஆகும். மோப்ப நாய்கள் மூலம் மலைப்பாம்பு இருக்கும் இடம் கண்டறியப்படுகிறது. பின்னர், பாம்புகள் பிடிக்கப்படுகின்றன.

புளோரிடா மீன் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு கமிஷனின் தலைவர் எலிசபெத் மாசென்ஸ்கி கூறுகையில், “புளோரிடா மாநிலத்தில் அதிக அளவில் பர்மா மலைப்பாம்புகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகின்றன. இந்த பாம்புகளால், புளோரிடா மாநிலத்துக்கே உரித்தான உயிரினங்கள் அழியத் தொடங்கிவிட்டன. இந்த மலைப்பாம்புகள் உண்மையில், எங்கள் நாட்டைச் சேர்ந்தவை அல்ல. இந்த பாம்புகள் முழுவதையும் பிடித்து அழிக்கும் முயற்சியில் இப்போது ஈடுபட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: