அழிவின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஓர் அற்புதம்! இதன் சிறப்புகள் தெரியுமா?

panai maramதமிழகத்தில் 30 கோடியாக இருந்த பனைமரங்கள் 5 கோடியாக குறைந்துள்ளன. அதிகரிக்கும் கொசு உற்பத்தி, அழிந்து வரும் சிறு பறவைகள் உட்பட்ட பல கேடுகளுக்கும் பனைமரங்களின் எண்ணிக்கைக்கும் நேர்முக மற்றும் மறைமுக தொடர்பு இருக்கிறது.

பனை பல உயிர்களுக்கு அடைக்கலம்

பனைமரம் மனிதநல மரம் மட்டும் அல்ல. பல உயிர்களுக்கு அடைக்கலம் தரும் பொதுநல மரம். அதன் அவசியம் நமக்கு புரிந்தது பாதி, நமக்கு புரியாதது மீதி என்ற அளவிலான இயற்கை தகவமைப்பு கொண்டது.

ஊர்கள் உருவாக காடுகள் அழிந்தன. அது தாவரங்களாக மட்டும் அழியவில்லை. அதை சார்ந்து வாழ்ந்திருந்த விலங்குகள், பறவைகள், ஊர்வன, பூச்சி இனங்கள், வேர்களில் எறும்புகள் உட்பட சக இனங்கள் தங்கள் வாழ்விடம் இழந்து, புதிய சூழலில் பாதுகாத்துக்கொள்ள முடியாமல் மடிந்தன.

அப்போதும் வீட்டு விலங்குகளுக்கு மனிதரிடம் ஒரு அடைக்கலம் கிடைத்தது. அதுபோல, பனைமரத்திலும் அதைச்சுற்றி வாழும் சில புதர்ச்செடிகளுக்குள்ளும் பதுங்கி வாழும் உயிர்களும் பிழைத்துக் கொண்டன.

இரவு நேரத்தில் இரைதேடும் உயிர்கள் கூட, பகல் நேரத்தில் எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள உயரமான பனைமரத்தில்தான் பதுங்கி ஓய்வெடுக்கின்றன.

பனையின் கழுத்து மற்றும் இலைப் பகுதியில் பலவகையான வெளவால்கள், சிறு குருவிகள், வானம்பாடி, பருந்து, ஆந்தை, தூக்கனாங்குருவி, பச்சைக்கிளி, மரங்கொத்தி, பனங்காடைகள், மைனாக்கள் போன்ற பறவைகளும், அணில், எலி போன்ற சிறு விலங்குகளும் தேள், பூரான், வண்டு போன்ற பூச்சி இனங்களும் வாழ்கின்றன.

அதன் தண்டுப்பகுதியில் பள்ளி, உடும்பு, ஓணான், போன்றவையும் முயல், மரநாய், பனங்காட்டு நரி, ஓநாய் என பல விலங்குகள் அதன் தோப்புகளில் வாழக்கூடியன.

வெளவால்கள் ஒரு நாளைக்கு பல நூற்றுக்கணக்கான கொசுக்களையும் ஈக்களையும் தின்று வாழ்பவை. இதுபோல ஒவ்வொரு உயிர்களும் இயற்கை சமநிலையில் நமக்கு நன்மை செய்யும் காரணிகளே!

மண்ணரிப்பை தடுக்கிறது

பனைமரத்தின் சல்லிவேர்கள் தொகுப்பாகவும் பல அடி ஆழம் வரையிலும் செல்லக்கூடியவை. பூமிக்கடியில் நீரை பாதுகாத்து சுற்றியுள்ள தாவரங்கள் வாழவும் உதவுபவை. மண்ணரிப்பை தடுக்கும் மரம் என்பதால் கடற்கரைகளை ஒட்டியும் ஆறு, குளம், வயல்களை ஒட்டிய வரப்புகளிலும் சாலை ஓரங்களிலும் இதை நம் முன்னோர்கள் வளர்த்தனர்.

பனைமரத்தை ஒட்டி ஆலமரம் அரசமரம் உட்பட பெரும்பாலான தாவரங்கள் வளர தூண்டப்படுகின்றன. கரிய நிறமும் உயரமும் உறுதியான கம்பீரமுமாக தோன்றினாலும் பனைமரமும் மூங்கில், தென்னையை போல ஒரு புல் இனத்தைச் சேர்ந்ததுதான்.

தொழில்நுட்ப வளர்ச்சிகள், நமக்கு இப்போது செய்துவரும் பல உதவிகளை, பனைமரத்தை கொண்டே கைவினைஞர்கள் முன்பு மக்களுக்கு உதவினர். அளவு குறைவு ஆனால், அறவே இல்லை பக்க விளைவு.

இந்தியாவில் தமிழகத்தில்தான் பனைமரங்கள் அதிகம். அதனாலும், பயனாலும், மாநில மரமாகவும் தேர்வாகியுள்ளது. இருந்தாலும் இப்போது பயனற்றதாகவும் கவனிப்பாரற்றதாகவும் குறைந்து வருகின்றன.

அழியக் காரணங்கள்

தமிழகத்தில் முன்பு நடுத்தர மக்களால் ஓட்டு வீடுகள் அதிகம் கட்டப்பட்டன. அதற்கு, நல்ல வைரம் பாய்ந்த பனைமரத்தில் அறுக்கப்பட்ட பனங்கைகளின் வரிச்சு கட்டமைப்பின் மீதுதான் ஓடுகள் வேயப்படும். அதனால், பெருமளவில் வெட்டப்பட்டன. செங்கல் சூளைகளுக்கும் வெட்டப்படுகின்றன

பராமரிப்பு இல்லாமலே வளரும் இந்த பனை மரங்கள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, தானகவே அழிந்துபோகிறது. புதிதாக வளர்க்கும் ஆர்வம் குறைந்துள்ளது.

குற்ற மரமா?

’கள்’ என்ற போதைப்பொருள் எடுக்கப்படுவதால், ஒரு குற்றமரமாக பார்க்கப்பட்டதுதான் அபத்தம். உதாரணமாக, பகுத்தறிவாதியான பெரியார் ஈ.வே.ரா கூட, மது ஒழிப்பு தீவிரத்தில், தனது தோப்பில் இருந்த நூற்றுக்கணக்கான மரங்களை வெட்டிச் சாய்த்தார்.

அது பலருக்கு முன்னுதாரணமானது. அதை ஒரு சீர்திருத்த நடவடிக்கையாக அவருடைய தொண்டர்கள் புகழ்ந்து பேசுவதும் உண்டு. சிந்திப்பதில் சிறந்த அவருக்கு அது ஒரு பொருந்தாத நடவடிக்கையாக அமைந்தது என்பதே உண்மை.

பனை தரும் பயன்கள்

’கள்’ பனைமரம் தானாக தரவில்லை, அது மனிதனுடைய குறுக்கு புத்தி. நுங்குக்காக மரத்தில் ஊறும் சாற்றை, குறுத்திலே சீவி அதில் முட்டி (களையம்) கட்டி ’கள்’ளாக சேகரித்து இறக்குகின்றனர்.

அப்போதும் அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்தால் ’கள்’ முறிந்து தித்திப்பான ’பதனீர்’ ஆகிவிடுகிறது. அது அருந்தவும் பொங்கல் போல சோறு சமைக்கவும் அதைக் காய்ச்சி பனைவெல்லம், பனங்கற்கண்டு, கருப்பட்டி, என பல மருத்துவ குணமுள்ள இனிப்புப் பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

நுங்கானால், அதில் கிடைக்கும் ஜெல்லி போன்ற சுளை சுவையானது. கோடைகாலத்துக்கு ஏற்ப குளிர்ச்சியானது. அதில் தாதுக்கள், விட்டமின்கள், நீர்ச்சத்தும் மருத்துவ குணமும் உள்ளது.

அதுபோல, பனம் பழம், பனங்கிழங்கு, பனைமொட்டு என கிராமத்தவர்கள் விரும்பி சாப்பிடும் சத்துள்ள இயற்கையான சிற்றுண்டிகளும் கிடைக்கும்.

பனை ஓலையில்தான் பழங்காலத்தில் ஓலைச்சுவடிகள் செய்தனர். திருவள்ளுவர் முதல் தில்லையில் உள்ள ஜோதிட ஓலைச்சுவடிகள் வரை எல்லாமே பனைமர சமர்ப்பணமே!

வீடுகளுக்கு கூரையாக, விசிறி, ஓலைப்பெட்டி, விளையாட்டுப் பொருள்கள் செய்யவும் பனை ஓலை பயன்படுகிறது. பனை ஓலையில் வைத்துக்கொடுக்கும் உணவு எளிதில் கெடுவதில்லை.

ஓலையின் கீழிருக்கும் கருக்குச் சட்டம் வேலியமைக்கவும் நாறு தயாரிக்கவும் பயன்படும். இப்படி பனைமரத்தின் ஒவ்வொரு பாகங்களுமே பயன்மிக்கது.

ஆனால், சுகாதார கேடான நவீன தொழிற்சாலை பொருள்கள் பெருகி அதன் மதிப்பை மங்கச்செய்தன.

பனைமர பொருள்களை மையப்படுத்தி தொழில்கள் உருவானால் அதன் எண்ணிக்கையும் பெருகும், நாம் இழந்த இயற்கை வளமும் திரும்பும்.

-http://news.lankasri.com

TAGS: