புதுடில்லி:’ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும், அரசியல் சட்டத்தின், 370வது பிரிவை, ரத்து செய்ய வேண்டும்’ எனக்கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
அரசியல் சட்டத்தின், 370வது சட்டப்பிரிவு, ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கிறது. ‘இந்தச் சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும்’ என, பா.ஜ., கட்சியினர் பல ஆண்டுகளாக கோரி வருகின்றனர்.இந்நிலையில், மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பின், இந்தக் கோரிக்கை வலுத்து வருகிறது.
சமீபத்தில், இதுதொடர்பாக பேசிய, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ‘அரசியல் சட்டத்தின், 370வது பிரிவை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் துவங்கி விட்டன. சம்பந்தப்பட்ட தரப்பினருடன், இதுதொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது’ என்றார். இது, பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.உடன், இதுதொடர்பாக, பதில் அளித்த மத்திய அரசு, ‘அரசியல் சட்டத்தின், 370வது பிரிவு தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, சரியான நேரத்தில், ஒரு உறுதியான பதிலை தெரிவிக்கும்’ என்றது. இதையடுத்தே, பிரச்னை முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில், பொதுநல மனு ஒன்று, தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில், ‘அரசியல் சட்டத்தின், 370வது பிரிவின் கீழான பலன்களை, நீண்ட காலம் அனுபவிக்க, அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை. ஆனால், ஜம்மு – காஷ்மீரில், இந்தச் சட்டப்பிரிவு நீண்ட காலமாக அமலில் உள்ளது. எனவே, அந்தச் சட்டப்பிரிவை ரத்து செய்யும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என, தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.